காதல் கடிதம் - திரை விமர்சனம்



குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பார்த்து எங்களுக்கு பழகிப்போச்சு' என்கிற அந்த அப்பாவின் குரல், அடி வயிற்றை பிசைந்து கொண்டேயிருக்கிறது. காதலின் வலியையும், வாழ்க்கையின் உத்தரவாதமின்மையையும் இதை விட அழுத்தமாக யாரால் சொல்லிவிட முடியும்?

இலங்கையிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வரும் அனிஷா, இங்கே ஸ்ரீபாலாஜியை சந்திக்கிறார். முதலில் பிணக்கமும், இரண்டு மூன்று ரீல்களுக்குள்ளாகவே இணக்கமும் ஏற்படுகிறது இருவருக்கும். காதல் என்ற வார்த்தைக்கு இருவருமே கொண்டிருக்கும் ஒரே அர்த்தம் 'நம்பிக்கையில்லை' என்பதுதான். ஆனால், மனசு 'ஒன்வே'யில் பயணிக்க ஆசைப்படுகிற சாத்தான் ஆயிற்றே? கொஞ்சம் கொஞ்சமாக அனிஷாவின் மேல் காதல் கொள்ளும் பாலாஜி, அதை வெளிப்படுத்துகிற நாளில் இலங்கைக்கு பறந்து விடுகிறார் அனிஷா. 'யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஊருக்கு போய் கடிதம் எழுதுகிறேன' இதுதான் அனிஷா பாலாஜியிடம் பேசிய கடைசி வார்த்தை! ஊருக்கு போன அனிஷா காதல் கடிதம் எழுதினாரா? அது பாலாஜியின் கைகளுக்கு வந்து சேர்ந்ததா? இதுதான் முடிவு.

ஹீரோ, ஹீரோயின் இருவருமே புதுமுகங்கள். நடிப்பும் அத்தனை கச்சிதம். வழக்கமாக ஹீரோயின் அறிமுகங்கள் தமிழ்சினிமாவில் எப்படியிருக்கும்? இதில் வேறு மாதிரி. இவரை சிக்னலில் சந்திக்கும் ஹீரோவும் கண்டவுடன் காதல் கொள்ளாமல் மரபை உடைத்திருப்பது ஆறுதல். சங்கீத குருவே சந்தேக குருவான பின்பு, மேற்கொண்டு படிப்பை எப்படி தொடர்வது? தவிக்கும் அனிஷாவுக்கு அற்புதமான ஒரு ஐடியாவின் மூலம் அவரை மீட்கும் ஸ்ரீபாலாஜி பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காதலில் விழுந்தபின் இவரிடம் தொற்றிக் கொள்ளும் தயக்கத்தையும் அநாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எம்.எஸ் மூலம் பாடல் கேட்கும் அனிஷாவுக்கு, வேறொரு நேயரின் விருப்பமாக அதே பாடலை ஒலிக்க செய்வது அழகு.

ஸ்ரீபாலாஜி இலங்கைக்கு போய் இறங்கியதும், மொத்த தியேட்டரும் அமைதியாகிவிடுகிறது. என்னவோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு மட்டும் மனசை பிசைய ஆரம்பித்துவிடுகிறது. படத்தில் இந்த இலங்கை பகுதி முழுவதும் நமக்கு என்னென்னவோ உணர்வுகளை கொடுக்கிற நேரத்தில், அதை மேலும் கனமாக்குகிறது இலங்கை அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் நடிப்பு.

ஆரம்ப கூச்சல்களுக்கு (உபயம் காதல் சுகுமார்) நெளிகிற நம்மை, காதல் என்ற மெல்லிய இழையால் கட்டிப் போட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதன்பின் இலங்கைக்கு பயணிக்கிற கதையை தன் வசம் இழுத்துக் கொள்கிறது கேமிராவும், இசையும், வசனங்களும்! யாழ்தேவி என்ற இரயிலையும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இலங்கையின் உள்ளடங்கிய தமிழர் பகுதிகளையும் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது. அதுவும் யாழ்தேவியில் என்ற பாடலும், அந்த மெட்டும், அந்த தாளமும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் வரிசையில் அமையும்! இசையமைப்பாளர் உதயா எதிர்கால தமிழ்சினிமாவின் நம்பிக்கை வரவு. ஒளிப்பதிவாளர் பி.ஆர்.ராஜனையும் அந்த வரிசையில் வைக்கலாம். பெயருக்கேற்றார் போல் வசீகர வரிகளை தந்திருக்கிறார் பாடலாசிரியர் வசீகரன்.

சென்சாரின் கத்தரிக்கு சின்ன வேலைகூட தராமல், ஈழத்தின் வேதனையை எடுத்து சொல்லிவிட முடியுமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் முகேஷ்! மனசுக்குள் விதையாக விழுந்து, மரமாக முளைத்து நிற்கும் ஒரு சில பதிவுகளுக்கு மத்தியில், காதல் கடிதமும் ஒரு முக்கியமான பதிவு. சந்தேகமேயில்லை!

தரவு - தமிழ்சினிமா

0 comments: