பொங்கல் போனஸ் முதல்வர் அறிவிப்பு!

சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளம்
ஏ, பி பிரிவு அலுவலருக்கு சிறப்பு போனஸ் ரூ.1000
பென்ஷன்தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.300



தமிழக அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியம் போனஸாகவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு போனஸாக ரூ. 1000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 300 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் பணியாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆகியோருக்கு 1999-2000ம் ஆண்டிற்கான 30 நாட்கள் பொங்கல் போனஸும், சிறப்பு போனஸாக ரூ.825ம், 2000-2001-ல் வழங்கப்பட்டது. 2000-2001-ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்த சலுகையினை இந்த அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் 2005-06-ம் ஆண்டுக்கான பொங்கல் போனஸும், சிறப்பு போனஸ§மாக 2007-ம் ஆண்டு பொங்கலையட்டி வழங்கியது.

2006-07ம் ஆண்டிற்கும் இந்த சலுகையினை தொடர்ந்து வழங்குவது என அரசு முடிவெடுத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கிடவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிறப்பு போனஸ் ரூ.825 என நிர்ணயித்து பத்து ஆண்டுகளாகி விட்டதாலும், விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டும் சிறப்பு போனஸை ரூ.1000 என உயர்த்தி வழங்கிடவும், அதே போல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பொங்கல் பரிசான ரூ.150-ஐ உயர்த்தி ரூ.300 என வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

‘சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் மாதச் சம்பளம் ரூ. 2500 என்ற அளவிலேயே கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தில் உள்ள சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியமாக ரூ.1000 வழங்கப்படும்.

இந்த ஆணையின் மூலம் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.267.08 கோடி செலவாகும். இதனால் சுமார் 12.68 லட்சம் அரசு அலுவலர்களுக்கும், 5.38 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

0 comments: