தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்' படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா' என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்' தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்- ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

லால்குடி ஜெயராமன்

சிறந்த பின்னணி பாடகர்- நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி- ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்- வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்- பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்- பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.

யுவன்சங்கர் ராஜா விவாகரத்து மனு- மனைவியும் சம்மதம் தெரிவித்தார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா, விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா (28). பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவர் ஒரு இசை நிகழ்ச்சிக்காக கடந்த 2002ல் இங்கிலாந்து சென்றபோது அங்கு சுஜாயா (28) என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்தார். இருவரும் காதலித்து 2003 செப்டம்பர் 3ம் தேதி லண்டனில் உள்ள பிரன்ட் மாவட்டத்தில் பதிவு திருமணம் செய்தனர்.

பின்னர், இருவரும் சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் மத்தியில் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் பிரிவதென்று முடிவு செய்தனர். இந்நிலையில், யுவன்சங்கர் ராஜாவும் அவரது மனைவி சுஜாயாவும் நேற்று உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 (பி) யின் கீழ் இருவரும் ஒருமனதுடன் விவாகரத்து கேட்டுள்ளனர். இந்த மனு முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில், நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. யுவனும் சுஜாயாவும் நேரில் ஆஜராயினர். அவர்கள் சார்பில் வக்கீல் சுமதி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் !

மின்சாரம் தேவையில்லை....ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு



ஒரே ஒரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.


அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

Ôவெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம்Õ என்கிறார் ரவி.

தரவு - தமிழ்முரசு

சர்வதேச நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் திடீர் கைது!

சோட்டா ஷகீல், டைகர் மேமனும் சிக்கினர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தது அம்பலம்



மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளை பாகிஸ்தான் உளவுத்துறை திடீரென கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய சதிகாரனாக கருதப்படும் தாவூத் இப்ராகிம், அவனது வலது கையாக விளங்கும் சோட்டா ஷகீல் மற்றும் மும்பை குண்டுவெடிப்பு சதியில் மூளையாக செயல்பட்ட டைகர் மேமன் ஆகியோர், கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். அவர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை வைக்கும் போதெல்லாம், தங்கள் நாட்டில் இல்லையென பாகிஸ்தான் அடித்து கூறிவந்தது.

பாகிஸ்தானிலிருந்து துபாய், குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு தாவூத் பயணம் செய்யும்போது இன்டர்போல் உதவியுடன் கைது செய்யும் முயற்சியும் இதுவரை பலன் அளிக்கவில்லை.
இதற்கிடையில் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தாவூத்துக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. ஆப்கானிஸ்தானில் விளையும் ஹெராயின் போதைப்பொருளை மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தாவூத் சப்ளை செய்து வருவதாக குற்றம்சாட்டி அவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கையை கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா வைத்தது. அப்போதும் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்ற வழக்கமான பல்லவியையே பாகிஸ்தான் பாடியது.

இந்நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த தாவூத் மற்றும் அவனது கூட்டாளிகளை பாகிஸ்தான் உளவுத்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசு இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இது நாள் வரை தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என கூறிவந்த பாகிஸ்தான் அரசு, தற்போது அவனை கைது செய்து விட்டோம் என பகிரங்கமாக ஒரு போதும் அறிவிக்காது. ஆனால் தாவூத் கைது செய்யப்பட்டிருப்பது உண்மைதான் மும்பை நிழல் உலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்தபடியே மும்பை நிழல் உலகத்துடன் தொடர்பு வைத்திருந்தார். மும்பையில் குறிப்பிட்ட சில நபர்களுக்கு அவனுடைய ரகசிய நம்பரை கொடுத்திருந்தார். கடந்த 3 நாட்களாக அந்த குறிப்பிட்ட எண்ணுடன் தொடர்பு கொண்டால் தாவூத்துக்கு பதிலாக வேறு சிலர் போனை எடுப்பதாகவும், போனில் பேசுபவர் பெயரை கேட்பதாகவும் மும்பை நிழல் உலக வட்டாரங்கள் தெரிவித்தன. இது போல் இதற்கு முன்னர் நடந்ததில்லை, இதனால் தாவூத் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாகிஸ்தானில் முஷரப் அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. தாவூத் இப்ராகீம் மூலம் புதிய சிக்கல் வருவதற்குள் அவனையும், அவனது கூட்டாளிகளையும் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தீர்த்துக் கட்டி விட்டு அவனது சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்றார்.

தரவு - தமிழ்முரசு

'தொட்டால் பூ மலரும்' - விமர்சனம்

ஊரார் பிள்ளையையெல்லாம் ஊட்டி வளர்த்த பி.வாசு தன் பிள்ளைக்கு தானே கலக்கிய பூஸ்ட். ஆரம்பகால கார்த்திக்கை நினைவூட்டும் கேரக்டர். அதை அசால்ட்டாக கையாண்டு கோலிவுட் ரயிலில் முதல் வகுப்பு மரியாதையோடு பயணத்தை துவங்கியிருக்கிறார் புதுமுகம் ஷக்தி.

கல்லூரி காதலில் சவால்கள் சகஜம். பணக்கார காதலியை பதட்டமில்லாமல் லவ் பண்ணும் ஷக்தி, அவளின் பெயரை தெரிந்து கொள்வதிலிருந்து, போன் நம்பரை தெரிந்து கொள்வது வரை சுற்றி சுற்றி வருகிறார். சுவாரஸ்யத்தை தருகிறார்.

காதலுக்கு அப்ளிகேஷன் போடும் ஷக்தியின் யுக்தி இளசுகளுக்கு புது ஃபார்முலா. அடையாறு, டி.நகர் என்று புதிர் போடும் காதலியின் போன் நம்பரை தெரிந்து கொள்வதிலும், காதலியை தியேட்டருக்கு வரச்சொல்ல, பீச்சுக்கு வரச்சொல்ல, ரகசிய பாஷைகளை பயன்படுத்துவதிலும் டாக்டரேட் வாங்குகிற அளவுக்கு தேறியிருக்கிறார்.

அம்மா சுகன்யாவின் அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சமாட்டார் ஹீரோ என்பது தெரிகிறது. அடுத்தது என்ன என்று நகம் கடிக்கிற நேரத்தில் பொசுக்கென்று உள்ளே வருகிறார் ராஜ்கிரண். மும்பையின் தாதா வரதராஜ வாண்டையாராம். கொடுக்கிற பில்டப்புகள் புலி என்பதாக இருக்கிறது. ஆனால் ஷக்தியின் அப்பாவித் தனத்தை அப்படியே நம்பி வீட்டுக்குள் சேர்க்கிறாராம். (அட போங்க சார்) போங்கு ஆட்டம் என்றாலும் ரசிக்கவே முடிகிறது அதையும்.

அத்தனை பேர் முன்னிலையிலேயும் கட்டிப்பிடிக்கிறேன் என்று சவால்விட்டு கட்டிப்பிடிப்பதும், வெளியே இவரை தேடிக் கொண்டிருக்க காருக்குள் பதட்டமில்லாமல் ஹீரோயினை லவ்வடிப்பதும் சற்று ஆட்டிதான் வைக்கிறது மனசை.

புதுமுகம் கௌரி முன்ஜால், அழகு நிரம்பிய அட்சய பாத்திரம்.

மும்பையின் முரட்டு தாதாவாக ராஜ்கிரண் போடும் சண்டைக்காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. அதற்காக வேலு நாயக்கரின் போலி நாயக்கராக இருப்பதுதான் உறுத்தல். (இன்னமும் நாயகனை யாரும் மறக்கலைங்க)

மும்பை தாதா என்று உதார்விடும் வடிவேலு, அங்கங்கே சிக்கி பஞ்சர் ஆகிற காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கிறது. இதே ஸ்டைலை பல படங்களில் அவர் பயன்படுத்தினாலும் அலுக்க வேண்டுமே, ம்ஹ¨ம்.

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் "வளையல் கரங்களை" பாடல் வசீகரம்.

பூவாய் மலர்ந்திருக்கிறார் ஷக்தி. போக போகத்தான் புரியும் பூவின் வாசம்.


தரவு- தமிழ்சினிமா

பிலிம் பேஃர் விருது விழா படங்கள்...



கடந்த ஆண்டுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. சிறந்த தமிழ் படத்துக்கான விருது, ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்துக்கு கிடைத்தது. சிறந்த நடிகராக அஜீத் (வரலாறு), சிறந்த நடிகையாக பாவனா (சித்திரம் பேசுதடி) ஆகியோர் விருது பெற்றனர்.

மற்ற விருதுகள் விவரம்:

சிறந்த குணச்சித்திர நடிகர் - பசுபதி (ஈ), குணச்சித்திர நடிகை - சரண்யா (எம்மகன்), இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான் (சில்லுனு ஒரு காதல்), பின்னணிப் பாடகர் - கானா உலகநாதன்(சித்திரம் பேசுதடி), பாடகி - ஸ்ரேயா கோஷால், பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் (வெயில்), இயக்குனர் - வசந்தபாலன் (வெயில்).

தெலுங்கில் சிறந்த படத்துக்கான விருது 'பொம்மரிலு'க்கு கிடைத்தது. சிறந்த நடிகராக மகேஷ் பாபு (போக்கிரி), சிறந்த நடிகையாக ஜெனிலியா (பொம்மரிலு) விருது பெற்றனர். இசையப்பாளர் விருது தேவி ஸ்ரீபிரசாத்துக்கும் சிறந்த இயக்குனருக்கான விருது புரி ஜெகந்நாதுக்கும் (போக்கிரி) வழங்கப்பட்டது.

மலையாளத்தில் சிறந்த படத்துக்கான விருதை 'நோட் புக்' படம் பெற்றது. 'கருத்த பக்ஷிகள்' படத்தில் நடித்த மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்வானார். அதே படத்துக்காக சிறந்த நடிகை விருதை பத்மப்பிரியா பெற்றார். 'நோட் புக்' பட இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.

பின்னணிப் பாடகி பி. சுசீலா, கிருஷ்ணம் ராஜு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சாதனையாளர்கள் விருது மம்மூட்டி மற்றும் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.

விழாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடிகர்கள் மம்மூட்டி, சிரஞ்சீவி, விஜய், நாகர்ஜுனா, வெங்கடேஷ், நடிகைகள் த்ரிஷா, இலியானா, நயன்தாரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெரும் மம்மூட்டி
சிறந்த இசையமைப்பாளர் விருது பெறும் ரஹ்மான்
சிம்ரனின் குத்தாட்டம்....
தரவு- தமிழ்முரசு

சனி பெயர்கிறதா? - விடுதலை தலையங்கம்

அறிவியல் வளர்ந்தும் மனிதன் பக்திப் போதையில் சிக்கினால் அவன் காட்டு விலங்காண்டிதான். `எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது; உலக்கையைக் கொண்டு வா, கோவணம் கட்டி வருகிறேன் என்கிற நிலையில்தான் பக்திப் பைத்தியம் பிடித்த - படித்த மனிதர்களும்கூட அலைகிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு வெகுதூரம் போகவேண்டாம். நாளைய தினம் சனிப்பெயர்ச்சியாம் - பக்தர்கள் இலட்சக்கணக்கில் திருநள்ளாறு கோயிலுக்குச் சென்று தரிசிக்கப் போகிறார்களாம். அறிவியல் கண்டுபிடித்த ஏடுகளில் கிறுக்குகிறார்கள் -விஞ்ஞானம் அளித்த தொலைக் காட்சிகளைப் பயன்படுத்தி சனிப் பெயர்ச்சி நேரடி ஒளிபரப்பாம்!

புரோகிதக் கொள்ளைக்கு நல்ல அளவு வசதி செய்து கொடுப்பதுதான் இதுபோன்ற சரடுகள். அதில்கூட ஒருமைப்பாடு கிடையாது. பஞ்சாங்கங்களில் பலவகை உண்டே. முரண்பாடு இல்லாமல் என்ன செய்யும்? திருக்கணித பஞ்சாங்கம், சுத்த வாக்கிய பஞ்சாங்கம், கஞ்சனூர் பஞ்சாங்கம் என்று தொழில் போட்டிகள் அதிலும் உண்டு. இந்த ஆண்டுகூட ஜூலை 16 சனிப் பெயர்ச்சி என்ற ஒரு பஞ்சாங்கமும், இல்லை, இல்லை ஆகஸ்ட் 5 தான் சனிப் பெயர்ச்சி என்று இன்னொரு பஞ்சாங்கமும் பறைசாற்றுகின்றன. இரண்டு என்ன, ஆண்டு ஒன்றுக்கு இருநூறு சனிப் பெயர்ச்சிகள் என்று சொன்னாலும் - புரோகித வரும்படிதானே!

பக்தர்கள்தான் புத்தியைப் பறி கொடுத்தவர்கள் ஆயிற்றே -ஓர் ஆண்டுக்கு எத்தனை சனிப் பெயர்ச்சி என்று கேட்கவா போகிறார்கள்?மற்றவற்றில் எல்லாம் ராஜாஜியையும், கல்கி கிருஷ்ண மூர்த்தியையும் தூக்கிப் பிடிக்கும் `கல்கி இதழ்கூட சோதிடத்தில் அவர்கள் இருவரும் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தாலும், வாரந்தோறும் ராசிபலன் வெளியிட மட்டும் தவறுவதில்லை.

மவுடீகமும், முட்டாள்தனமும் வளர்ந்தால்தானே பார்ப்பனியம் வளரும் என்பதை அவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் விடாப்பிடியாக அவற்றைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்!அறிவியல்படி சூரியன் என்பது நட்சத்திரமாக இருந்தாலும், ஜோதிடம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. அதனைக் கிரகம் என்றே சொல்லுகிறார்கள்.

ஒரு வேடிக்கை - காஞ்சி `சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒருமுறை `தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கூறினார் (13.4.2004).

`முக்கிய கிரகம் சூரியன், மற்ற கிரகங்கள் அதைச் சுற்றி இயங்குகின்றன என்று கூறினாரே பார்க்கலாம் - இவர்தான் ஜெகத்குருவாம். தொடக்கப் பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரியும் சூரியன் ஒரு நட்சத்திரம் என்று. ஆனால், மத மவுடீகம் பிடித்து ஆட்டும் சங்கராச்சாரியார்களுக்கு இந்தப் பாலபாடம் கூடத் தெரியவில்லை என்பது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு.

இந்த வருடம் சனி பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறாராம் - எப்படியிருக்கிறது கதை?

சனி என்பது ஒரு கிரகம். பூமியிலிருந்து கிட்டத்தட்ட 80 கோடி மைலுக்கு அப்பாலிருக்கிறது. பூமியைவிட 700 மடங்கு பெரியது. சனி கிரகத்தில் உயிர்கள் கிடையாது. மைனஸ் 244 டிகிரி பாரன்ஹீட் கடும் குளிர் - ஆக்சிஜன் கிடையாது; எனவே, உயிர் வாழும் நிலை அங்கு இல்லை. இப்படி அறிவியல் கூறும்போது புராணீகர்கள் என்ன கூறுகிறார்கள்? சனி சூரியனுக்கும், சம்ஞைக்கும் பிறந்தவனவாம்.

இந்து மதத்தில் எல்லாமே இனக் கவர்ச்சிதான் - புணர்ச்சிதான்!

80 கோடி மைல் தொலைவில் உள்ள சனியின் சுழற்சிக்கும், பூமியில் உள்ள மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? மற்ற மற்ற உயிர்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் போன மர்மம் என்ன?
இதனையும் இந்த 2007 இல் 21 ஆம் நூற்றாண்டில் நம்பி சனி பகவான் பொல்லாதவன் - அவன் கோபத்தைத் தணிக்கவேண்டும் - திருநள்ளாறு செல்லவேண்டும்; நளன் தீர்த்தத்தில் எண்ணெய்த் தேய்த்து முழுகவேண்டும் என்று நம்புவதை நினைத்தால், சீ... இப்படியும் இந்த 2007--லும் இந்த மனிதர்களா என்று பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

அய்.ஏ.எஸ்., அதிகாரிகள், காவல்துறை அய்.பி.எஸ்., அதிகாரிகள், ஆளுநர்கள், அமைச்சர்கள் என்று ஒரு கிரகத்தைப் பகவானாக்கி மூத்திரக் குட்டையில் மூழ்குகிறார்களே -வெட்கப்படுவதா - வேதனைப்படுவதா?

விஞ்ஞான மனப்பான்மையை ஊக்குவிக்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 15ஏ 51(ஏ) கூறுவதன் லட்சணம் இதுதானா? மக்கள் நல அரசாக இருந்தால் இந்தக் கோயில்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி அவற்றைப் பாடசாலைகளாக்க வேண்டாமா?

விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் அழகாகவே சொன்னார்:
"சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு அவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது? தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பதுபற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தகைய குட்டிக்குட்டி மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டவேண்டுமானால், இதற்கெல்லாம் மூல மூத்த மூட நம்பிக்கையான கடவுள் என்ற நம்பிக்கையின் வேரை அடியோடு வெட்டி வீழ்த்தினாலொழிய மனிதனை மானமும், அறிவும் உள்ளவனாக, பண்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தக்காரனாக மாற்றுவது என்பது இயலாது. கடவுள்மீது தந்தை பெரியார் ஏன் கை வைத்தார் என்பதை இந்த இடத்தில் அக்கறையோடு சிந்திப்பார்களாக!