கர்நாடக அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி அத்துமீறி ஒகேனக்கல்லில் நுழைந்து ஆய்வு செய்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 500 பேருடன் இன்று ஒகேனக்கல் வந்து ஆய்வு செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாட கன்னட அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் கருணாநிதி, தர்மபுரி வந்தபோது, 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் ஒகேனக்கல் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர்.
இதேபோல் கடந்த வாரம் கர்நாடக அமைப்பை சேர்ந்த சிலர் பரிசல் மூலம் ஒகேனக்கல் இடைத்திட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வரைபடத்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட வன அதிகாரிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழக போலீசுக்கோ, வனத்துறைக்கோ எந்தவித அறிவிப்பும் தராமல் ஒகேனக்கல் சினிபால்ஸ், தொங்குபாலம் ஆகிய இடங்களுக்கு சென்று வரைபடத்தை வைத்து ஆய்வு செய்து, கோஷம் போட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் ஒகேனக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில பா.ஜ. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மாதேஸ்வரன் மலைக்கு வருகிறார். பின்னர், கர்நாடக மாநில பா.ஜ. நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பா, சாம்ராஜ் நகர் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவக்குமார், கொள்ளேகால் டி.எஸ்.பி. தரணிதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, வன அலுவலர் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உட்பட சுமார் 500 பேருடன் பாலாறு வழியாக கோபிநத்தம் வருகிறார். பின்னர் மாறுகொட்டாய் வழியாக ஒகேனக்கல் வருகிறார். இருமாநில எல்லை பகுதிகளை ஆய்வு செய்கிறார். இத்தகவலை மாதேஸ்வரன்மலை போலீசார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவார்கள். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஒகேனக்கல் வருவதாக கூறப்படுவதால், ஒகேனக்கல்லில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Saturday, March 15, 2008
Subscribe to:
Post Comments
0 comments:
Post a Comment