சிதம்பரத்தில் திருவாசகம் ஒலித்தது!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் இன்று காலை சென்ற குழுவினர் தேவாரம், திருவாசகம் பாடினர். இதையட்டி அங்கு டி.ஐ.ஜி. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் திருசிற்றம்பல மேடையில் அரசு உத்தரவின்படி கடந்த 1-ம் தேதி தேவாரம் பாடுவதற்காக சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட பக்தர்கள் சென்றனர். அப்போது நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தீட்சிதர்கள் தாக்கினர். அன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்திலும் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 10 தீட்சிதர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், சிதம்பரத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

இதையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என்றும், இதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புரட்சிகர மாணவர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தை அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காவியசெல்வன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தேவாரம் பாடுவதற்காக நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர்.

30-க்கும் மேற்பட்டோர் தேவாரம் பாடியதால் கோயில் வளாகம் முழுவதும் அது எதிரொலித்தது.அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையில் கடலூர் எஸ்.பி., பிரதீப்குமார், சிதம்பரம் ஏஎஸ்பி செந்தில்வேலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோர்ட் புறக்கணிப்பு
சிதம்பரம் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் நடனம் தலைமையில் நேற்று நடந்தது. தேவாரம் பாட ஆறுமுகசாமிக்கு ஆதரவாக சென்ற வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தடியடியைக் கண்டித்து 8-ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments: