நடிகர் ரகுவரன் மரணம்


பிரபல தமிழ் நடிகர் ரகுவரன் மருத்துவமனையில் காலாமானார். உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 49.இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுமென தெரிகிறது .

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திப்போம்.

டெஸ்ட் அணியில் இருந்து இஷாந்த் சர்மா, கம்பீர் நீக்கம்...

தென் ஆப்ப்ரிக்காவிற்கு எதிராக எதிர்வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் மற்றும் உடல்தகுதி காரணமாக இஷாந்த் சர்மா, கவுதம் கம்பீர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மார்ச் 21ம் தேதிக்குள் மஹேந்திரசிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் தங்களது உடல் தகுதியினை நிரூபிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

அணிவிவரம் வருமாறு....

Wasim Jaffer, Virender Sehwag Rahul Dravid Sachin Tendulkar Saurav Ganguly, Vangipurappu Laxman, Yuvraj Singh ,Mahendra Singh Dhoni (wicketkeeper), Irfan Pathan, Anil Kumble (captain), Harbhajan Singh, Murali Kartik, Shanthakumaran Sreesanth , Rudra Pratap Singh.

கர்நாடக முன்னாள் முதல்வர் இன்று ஒகேனக்கல் வருகையால் பதற்றம் அதிகரிப்பு..

கர்நாடக அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி அத்துமீறி ஒகேனக்கல்லில் நுழைந்து ஆய்வு செய்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 500 பேருடன் இன்று ஒகேனக்கல் வந்து ஆய்வு செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாட கன்னட அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் கருணாநிதி, தர்மபுரி வந்தபோது, 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் ஒகேனக்கல் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர்.

இதேபோல் கடந்த வாரம் கர்நாடக அமைப்பை சேர்ந்த சிலர் பரிசல் மூலம் ஒகேனக்கல் இடைத்திட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வரைபடத்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட வன அதிகாரிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழக போலீசுக்கோ, வனத்துறைக்கோ எந்தவித அறிவிப்பும் தராமல் ஒகேனக்கல் சினிபால்ஸ், தொங்குபாலம் ஆகிய இடங்களுக்கு சென்று வரைபடத்தை வைத்து ஆய்வு செய்து, கோஷம் போட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் ஒகேனக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில பா.ஜ. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மாதேஸ்வரன் மலைக்கு வருகிறார். பின்னர், கர்நாடக மாநில பா.ஜ. நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பா, சாம்ராஜ் நகர் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவக்குமார், கொள்ளேகால் டி.எஸ்.பி. தரணிதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, வன அலுவலர் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உட்பட சுமார் 500 பேருடன் பாலாறு வழியாக கோபிநத்தம் வருகிறார். பின்னர் மாறுகொட்டாய் வழியாக ஒகேனக்கல் வருகிறார். இருமாநில எல்லை பகுதிகளை ஆய்வு செய்கிறார். இத்தகவலை மாதேஸ்வரன்மலை போலீசார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவார்கள். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஒகேனக்கல் வருவதாக கூறப்படுவதால், ஒகேனக்கல்லில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

WE(A)eKEND






















ஆவின் பால் விலை உயர்வு

பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ரூபாயாக உயர்ந்தது. பால் உற்பத்தியாளர்களில் பால் கொள்முதலை அதிகரிக்க அதன் விலையை உயர்ந்த வேண்டும் என்று ‌அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னையில் தமிழக அரசு விடுத்த அறிக்கையில் பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் இருந்து 4 ரூபாயாக உயர்வு என அறிவித்தனர். மேலும், ஆவின் பால் லிட்டருக்கு குறைந்த பட்சம் இரண்டு ரூபாய் வரை உயரும் என்றும் அறிவிக்கப் பட்டது.

சிதம்பரத்தில் திருவாசகம் ஒலித்தது!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் இன்று காலை சென்ற குழுவினர் தேவாரம், திருவாசகம் பாடினர். இதையட்டி அங்கு டி.ஐ.ஜி. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் திருசிற்றம்பல மேடையில் அரசு உத்தரவின்படி கடந்த 1-ம் தேதி தேவாரம் பாடுவதற்காக சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட பக்தர்கள் சென்றனர். அப்போது நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தீட்சிதர்கள் தாக்கினர். அன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்திலும் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 10 தீட்சிதர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், சிதம்பரத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

இதையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என்றும், இதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புரட்சிகர மாணவர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தை அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காவியசெல்வன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தேவாரம் பாடுவதற்காக நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர்.

30-க்கும் மேற்பட்டோர் தேவாரம் பாடியதால் கோயில் வளாகம் முழுவதும் அது எதிரொலித்தது.அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையில் கடலூர் எஸ்.பி., பிரதீப்குமார், சிதம்பரம் ஏஎஸ்பி செந்தில்வேலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோர்ட் புறக்கணிப்பு
சிதம்பரம் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் நடனம் தலைமையில் நேற்று நடந்தது. தேவாரம் பாட ஆறுமுகசாமிக்கு ஆதரவாக சென்ற வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தடியடியைக் கண்டித்து 8-ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

WE(A)eKEND







எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டு தற்கொலை

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 67.

பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ். இவரது இயற்பெயர் ராம்மோகன். மனைவி ஹேமா (65). இவர்களுக்கு குழந்தையில்லை. கணவன், மனைவி மட்டும் கோடம்பாக்கம் டேங்க் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் வசித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக ஹேமா இறந்தார். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் தவித்தார் ஸ்டெல்லா புரூஸ்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு பூட்டியிருப்பதாக ஹேமாவின் தம்பி சேகருக்கு தகவல் கிடைத்தது.அவர், இன்று காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது உள்பக்கமாக பூட்டியிருந்தது. உடனே கோடம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சேதுபாண்டியன் தலைமையிலான போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, முன்பக்க அறையில் உள்ள மின் விசிறியில் ஸ்டெல்லா புரூஸ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். வேஷ்டியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடலை இறக்கிய போலீசார், அதை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் ஸ்டெல்லா புரூஸ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில் எழுதியிருப்பதாவது:

கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக, ஆடம்பர சிந்தனை துளியும் இன்றி வாழ்ந்திருக்கிறேன். கண்ணை இமை காப்பதுபோல் என்னை பார்த்து, அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன். நானும் ஹேமாவும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மிகமான இலக்கிய தன்மையான காவியம். என் மரணம், முதுமையில் ஒடுங்கிப் போயிருக்கும். ஹேமாவின் துணை இல்லாத சூனியம், தாங்க முடியாததாக இருக்கிறது. தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.

எனவே, ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது, மரண விடுதலை பெறுகிறேன்
.


இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் இறந்தது தெரியவந்தது. "அது ஒரு நிலாக்காலம்" உள்பட பல்வேறு புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகளை ஸ்டெல்லா புரூஸ் எழுதியுள்ளார்.

தரவு - தமிழ்முரசு

வீட்டில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க விருப்பமா?

வீட்டில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சுற்றுலா துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

சுற்றுலா ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2007ல் தமிழகத்துக்கு 5 கோடியே 6 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது இந்திய சுற்றுலா வளர்ச்சி விகிதத்தில் 29.2 சதவீதம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வீடுகளில் தங்க வைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இதன்படி, தங்கள் வீட்டில் சுற்றுலா பயணியை தங்கவைக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் முழு முகவரியுடன் சுற்றுலா ஆணையர், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், வாலாஜா ரோடு, சென்னை-2 என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அறிக்கையில் சுற்றுலா ஆணையர் தெரிவித்துள்ளார்.