திரை விமர்சனம் - நெஞ்சத்தை கிள்ளாதே

தேடி தேடி அனுபவத்தை சம்பாதித்துக் கொள்கிற ஒருவன், தன்னை தேடி ஒரு காதல் அனுபவம் வரும்போது என்ன செய்கிறான்? இதுதான் நெஞ்சத்தை கிள்ளாதே. நினைத்தால், அந்த ஸ்டார் ஹோட்டலையே விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால், அங்கு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் ஜெயிலுக்கு போகிறார் விக்ராந்த். பதினைந்தாயிரம் கொடுத்து விலைமாதுவை அழைத்துச் சென்று அவளை நிம்மதியாக உறங்க வைத்து அனுப்புகிறார். இப்படியெல்லாம் செய்யும் ஒரு பணக்காரனை பார்த்தால் என்ன வரும்? காதல் வருகிறது பாரதிக்கு. இவர் உருகி உருகி காதலை சொல்ல, அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் விக்ராந்த்.

அதன்பின் நிஜமாகவே பாரதி மேல் காதல் வருகிறது விக்ராந்துக்கு. இது பாரதியின் முறை. விக்ராந்த் செய்த அத்தனை அவமானங்களையும் இவரும் செய்ய, சேர்வார்களா? மாட்டார்களா? என்ற கேள்வியோடு நகர்கிறது படம். இடையில் பாரதிக்கும் விக்ரமாதித்யாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. தாலி கட்டுகிற கடைசி வினாடி வரைக்கும் தனக்கு வாய்ப்பிருக்கும் என்று நம்புகிற விக்ராந்த் மணமேடைக்கு எதிரிலேயே நிற்கிறார். கடைசியில் அதுவும் கிட்டாமல் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்த, 'உணர்வும் ஆக்கமும் அகத்தியன்!' நல்லவேளையாக தமிழ்சினிமா சம்பிரதாயங்களை உடைத்து, இந்த படத்திலாவது இடையில் வந்த மாப்பிள்ளையோடு ஹீரோயினை அனுப்ப சம்மதித்தார்களே!

விக்ராந்த் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, நகர விடாமல் நங்கூரம் பாய்ச்சுகிறது விதி! நக்கல், நையாண்டி, காதல், சோகம் என்று நாலாபுறமும் கவனிக்க வைக்கிற நடிப்பு இருக்கிறது அவரிடம். ஒவ்வொரு முறையும் பாரதி அவமானப்படுத்தும் போதெல்லாம், கவலையும் புன்சிரிப்புமாக அவர் ஏற்றுக் கொள்வது பரிதாபம்.

சில காட்சிகளில் ஆச்சர்யப்படுத்துகிறது அகத்தியன் பிராண்ட்! தன்னுடைய அப்பாவிற்கு இன்னொரு மனைவி இருப்பது தெரியவர, அதை டீசண்டாக அணுகுவது... தங்கையின் காதலனை வரவழைத்து பேசுவது... ஒரே ரூமில் ஒரே பெட்டில் கண்ணியமாக இருப்பது சாத்தியமா? இப்படி நிறைய! விபசாரத்திற்கு சப்போர்ட் பண்ணுகிற வசனங்களிலும் முற்போக்கு சிந்தனை!

அம்முவில் பார்த்த பாரதியா இது? சில கோணங்களில் அழகு. பல கோணங்களில் பகீர். நடிப்பை பற்றி கவலைப்படுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அவருக்கு தேவை, அவசரமாக ஒரு ஜிம்!

கேரளாவின் படகு வீடும், அதையட்டிய காட்சிகளும், அழகாக இருந்தாலும் நீளமாக தொடர்வது ஆயாசம்...

பின்னணி இசையில் படுத்தியிருக்கிறார் யுகேந்திரன். ஒரே ரீரெக்கார்டிங் ஒலியை வைத்துக் கொண்டு எல்லா ரீல்களையும் ஒப்பேற்றுவதை எதில் சேர்ப்பது? நல்லவேளையாக நேரே வரட்டுமா என்ற பாடல் இனிமை.

வலிக்கிற மாதிரி கிள்ளியிருக்கிறார்கள்!

1 comments:

February 19, 2008 at 10:13 PM Tech Shankar said...

இந்தப் படத்தின் அத்தனை பாடல்களுமே ஏதோ இசைக்கும் பாடல்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் ரீமிக்ஸ் பாட்டு கேட்பது போல இருக்கிறது. இசையமைப்பாளர் தூங்கிவிட்டாரோ என்று நினைக்கிறேன்