இந்திரலோகத்தில் நா அழகப்பன். - திரைவிமர்சனம்

எல்லாரையும் கொல்லும் எமனையே கொன்றுவிட்டால்? ஒரு நரனின் ஆசையை படமாக்கியிருக்கிறார்கள். பூவுலகில் நாடகம் போட்டு பிழைப்பு நடத்தும் அழகப்பன், பரிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரு சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அந்த சிலையோ தேவலோகத்து ரம்பை! வம்பை விலை கொடுத்து வாங்கியது மாதிரி ஆகிவிடுகிறது வாழ்க்கை. மாலை நேரமானால் அலேக்காக தேவலோகத்துக்கு தூக்கிச் செல்லப்படும் அழகப்பன், மறுநாள் பூவுலத்தில் இறக்கிவிடப்படுகிறார். இப்படி மாறி மாறி சவாரி அடிக்கும் அழகப்பன் நம்ப வடிவேலுவேதான்! தேவலோகத்திலும் இந்திரன், எமன் இவர்தான். நல்லவேளை... நீ என்னை மாதிரியே இருக்கியே என்ற வழக்கமான டயலாக் விடாமல் ஆகவேண்டியதை பார்த்திருக்கிறார்கள்.

தோற்றம் - மறைவு என்றுதானே போட்டோவுக்கு கீழே குறிப்பு எழுதுவார்கள்? இங்கே தோற்றம் - ஓட்டம் என்று எழுதி, வடிவேலுவின் தாத்தாக்களின் 'எஸ்கேப்பிசத்தை' பற்றி விவரிக்க, ஆரம்பமே அதிரடி! சதைபோட வேண்டும் என்று நினைப்பவன் மொத்த டானிக்கையும் ஒரே மூச்சில் குடித்த மாதிரி, ஆசைப்பட்ட கெட்டப்பையெல்லாம் போட்டிருக்கிறார் வடிவேலு. இந்த சிரிப்பு ராஜா போட்டிருக்கும் 90 வயது தாத்தா வேடம், நகைச்சுவைக்கு பதிலாக சோகத்தை வரவழைப்பதால், அழகப்பன் பல நேரங்களில் அழுகையப்பனாகவும் ஆகியிருப்பது சற்றே ஆயாசத்தை வரவழைக்கிறது... எமன் கெட்டப்பில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறார் வடிவேலு. அவரின் தூய தமிழ் வசனங்களும், அடிவயிற்று பிளிறல்களும் புதிய வடிவேலுவை காட்டியிருக்கிறது. எந்நேரமும் பெண்களிடம் கடலை போடும் இந்திரனாகவும் அவரே.

தன்னிடம் அன்பை பொழியும் சிறுமி ஒருத்தியின் மரணத்திற்கு பின் எமனை கொல்லும் உத்தேசத்தோடு இந்திரலோகம் போகும் வடிவேலு, கூடவே சாராய பேரலையும் கொண்டு செல்வது சுவாரஸ்யம். அதில் கொஞ்சத்தை எமனுக்கே ஊற்றிக் கொடுக்கிற கற்பனையும் பலே. ஆனால், அங்கே பொங்கி வழிய வேண்டிய கலகலப்பு, வெறும் சலசலப்பாகவே முடிந்து விடுவதுதான் சப்!

ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகியோருக்கு போட்டியாக இந்திரலோகத்தில் ஆடவிட யோசித்தார்களோ என்னவோ? 'கோடங்கி பிடாரி ஆத்தா' என்ற பெயரோடு இறக்கிவிடப்பட்டிருக்கிறார் ஸ்ரேயா! ஆத்தா...இதுக்கா இத்தனை பில்டப்பு?

திரும்பிய பக்கமெல்லாம் தன் அசுர கரங்களாலும், கற்பனைகளாலும் பிரமிப்பூட்டியிருக்கிறார் கலை இயக்குனர் தோட்டா தரணி. கண் முன் விரியும் இந்த அதிசயங்களை அதே அழகோடு திரையில் வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.

கதைகேற்ற பழைய வாசனையோடு உருவாக்கப்பட்டிருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை அந்த உலகத்திற்கே இட்டுச் செல்கின்றன. இசை சபேஷ் - முரளியா? சபாஷ் - முரளியா?

இந்திரலோகத்தில் ஒரு 'இம்சை' அரசன்!

தரவு - தமிழ்சினிமா.காம்

0 comments: