
எழுத்தாளர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிரபல எழுத்தாளர் சுஜாதா (73), உடல் நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சுஜாதா இறந்தார். அவரது உடல் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பார்க் பின்புறம் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோர் சுஜாதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ. தலைவர் இல.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், பார்த்திபன், கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், அமீர், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், நடிகைகள் சுகாசினி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன், கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோரும் சுஜாதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ரஜினிகாந்த் கூறும்போது, ‘ சுஜாதாவின் மறைவு, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இறுதிவரை தனக்கு பிடித்தமான தொழிலையே செய்து கொண்டிருந்தார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றார்.
பின்னர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
நாளை மறுநாள் (2-ம்தேதி) சென்னை நாரதகான சபாவில் இரங்கல் கூட்டம் நடை பெறுகிறது. சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
தரவு - தமிழ்முரசு