குடியுரிமையை ரத்து செய்து வைகோவை நாடு கடத்த வேண்டும் - நடிகர் கார்த்திக் ஆவேசம்

வைகோவின் குடியுரிமை ரத்து செய்து அவரை நாடு கடத்த வேண்டும் என தேனியில் நடந்த கூட்டத்தில் நடிகர் கார்த்திக் பேசினார்.

தேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசியதாவது:

தேனி தொகுதி வேட்பாளராக மாவட்ட செயலாளர் ரமேஷை நிறுத்துகிறேன். நான் போட்டியிடும் தொகுதி குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடுவேன். இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும். நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை.

புதிய கட்சி தொடங்கியவர் தலைவர்களையும், முதல்வரையும் தரக்குறைவாக பேசி வருகிறார். ஒரு கட்சி கிழட்டு கட்சி என்று தேசிய கட்சியை விமர்சனம் செய்கிறது. அதற்கு மறுநாள் அக்கட்சியை சேர்ந்தவர் நான் கிழவியல்ல... குமரி தான் என விளக்கம் தருகிறார். ஒருவர் கிழவியா..குமரியா? என்பதா இப்போதுள்ள நாட்டின் பிரச்னை. அதனால் நாட்டின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறது. அரசியல்வாதிகளின் சொத்தில் 3 ல் ஒரு பங்கை எடுத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

முக்குலத்தோர் ஓட்டுவங்கியை பெறும் அரசியல் கட்சி, அந்த இனத்திற்கு எவ்வித நன்மையும் செய்தது கிடையாது. இப்போதுள்ள அரசியல்வாதிகளில் என்னை தவிர யாரும் உண்மை பேசுவதில்லை. அதனால் என்னை கூட்டணியில் சேர்க்க கட்சிகள் அஞ்சுகின்றன. பொய்களை மாறி, மாறி அறிக்கையாக கட்சிகள் வெளியிட்டு கொண்டிருக்கின்றன. நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வரும் 17ம் தேதிக்கு பிறகு நான் பேசப்போகும் உண்மைகளால் மற்ற அரசியல் கட்சிகள் கதிகலங்க போகின்றன.

இவ்வாறு கார்த்திக் பேசினார்.

தரவு - தினகரன்


1 comments:

April 14, 2009 at 10:09 AM உதயம் said...

பைத்தியமும் சில சமயம் உண்மையை பேசும் !