சத்யராஜ் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை! - பாரதிராஜா பரபரப்பு பேட்டி

உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறார் பாரதிராஜா. கிராமங்களின் முகவரியை உலகமெல்லாம் கொண்டு சென்ற இந்த போஸ்ட்மேன், அறுபதை கடந்த பின்பும் ஃபாஸ்ட்மேனாக இருப்பது ஆச்சர்யம். ஒருவர், இருவரல்ல... தமிழ் திரையுலகில் இன்று கோலாச்சிக் கொண்டிருக்கும் அற்புதமான இயக்குனர்கள் பலரின் ஓப்பன் யுனிவர்சிடி இவர்! தான் இயக்கப் போகும் புதிய தொலைக்காட்சி தொடர் குறித்து பேச ஆரம்பிக்கிறார். பேச்சு மெல்ல திசை திரும்பி பயணிக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரை இயக்க சம்மதித்திருக்கிறார் பாரதிராஜா. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8.30 க்கு மண்வாசனையோடு ஒளிப்பரப்பாக இருக்கிறாள் தெக்கத்திப் பொண்ணு. நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா என்று மக்களால் அறியப்பட்ட நட்சத்திரங்களுடன், புதிய நடிகர்களையும் இணைத்துக் கொண்டு இந்த நெடுந்தொடரை தரவிருக்கிறார் பாரதிராஜா.

தனது அலுவலகத்தில் என்றும் மாறாத அவருக்கேயுரிய கம்பீரத்தோடு பேச ஆரம்பிக்கிறார். சின்னத்திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் உழைப்பு ஒன்றேதான். சினிமாவில் வாழ்க்கையை ரொம்ப வேகமாக சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் சின்னத்திரையில் அப்படியல்ல. இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. கொஞ்சம் நிதானமாக சொல்லலாம். இந்த தொடரை என்னுடைய சினிமா பாணியிலேயே சொல்லியிருக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே படங்களையெல்லாம் பார்த்தால் என்ன ஃபீலிங் வருமோ, அதே உணர்வை இந்த சீரியலில் அனுபவிக்கலாம். பொதுவாக சீரியல் என்றாலே அழுகிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கும். இதில் அப்படி கிடையாது. ஏன் அழுகிற மாதிரி காட்சிகளே இல்லை என்று கேட்கிற அளவுக்கு இருக்கும். கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். இப்போதைக்கு சுமார் 300 எபிசோடுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எங்கே சரக்கு குறைகிறதோ, அங்கே நிறுத்திக் கொள்வேன். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்வேன். சின்னத்திரையிலும் மரபுகளை உடைப்பேன்.

ஏன் கலைஞர் டி.வி யை தேர்ந்தெடுத்தீர்கள்?

வேறு யாரும் என்னை அணுகி இப்படி ஒரு சீரியல் எடுத்து தரும்படி கேட்கவில்லை. என்னை நாடி வந்ததால் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.

நீங்களே விரும்பிதான் சின்னத்திரைக்கு வந்தீர்களா?

விரும்பிதான் வந்தேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜியையே இயக்கியிருக்கிறேன். நான் சொன்னதைதான் அவரே கேட்டார். என்னை இப்படி எடு என்றோ, இதைதான் தரவேண்டும் என்றோ யாரும் கட்டாயப்படுத்த முடியாது. சினிமா மாதிரி இதில் பயம் இல்லை. முக்கியமாக ரெவின்யூ என்ற விஷயம் இல்லை.

நீங்கள் சின்னத்திரைக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து படங்களை இயக்குவீர்களா?

நிச்சயமாக இயக்குவேன். பொம்மலாட்டம் படத்தின் வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டேதான் தெற்கத்தி பொண்ணையும் இயக்கி வந்தேன். இதே மாதிரி தொடர்ந்து படங்களை இயக்குவேன்.

குற்றப்பரம்பரை படத்தை இயக்கப் போவதாகவும், அதில் நீங்களே நடிக்கவிருப்பதாகவும் கூறினீர்களே?

என் வாழ்க்கையில் உச்சக்கட்ட காட்சியாக அந்த படம் இருக்கலாம்.

தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே? முன்பு கன்னடர்களுக்கு எதிரான நெய்வேலி போராட்டத்திற்கு நீங்கள்தானே தலைமை ஏற்றீர்கள்?

உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்கிறார்களே?

எனக்கு இதுவரை வரவில்லை. அப்படி வந்தால், உங்களின் முந்தைய கேள்விக்கு என்ன பதிலோ? அதையே பதிலாக அனுப்புவேன்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?

டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.

காவிரி நீர் பிரச்சனையாக இருக்கட்டும். ஒகேனக்கல் பிரச்சனையாக இருக்கட்டும். அல்லது வேறு பிரச்சனையாக இருக்கட்டும், எந்த விஷயத்தை எடுத்தாலும் இங்கே ஒட்டு மொத்தமான உணர்வுகள் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் கலப்படமாக இருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் தலை வணங்கி போகிறோம். இந்த மண்ணின் மைந்தன்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற உணர்வு இல்லை. இங்கே மக்கள் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்கள். அதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

பெர்லின் திரைப்பட விழாவில் பருத்தி வீரன் படத்திற்கு விருது வாங்கி வந்த டைரக்டர் அமீருக்கு எந்த அமைப்பும் பாராட்டு விழா நடத்தவில்லையே? குறிப்பாக இயக்குனர்கள் சங்கம் கூட...

இதை இயக்குனர்கள் சங்க தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும். நான் அமீரை நேரில் அழைத்து பாராட்டினேன். என் இத்தனை வருட சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்கவில்லையே என்றேன். இதைவிட வேறென்ன பாராட்ட முடியும்?

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து மூவரும் தனித்தனியாக பிரிந்து விட்டீர்கள்? மறுபடியும் சேரும் வாய்ப்புகள் இருக்கிறதா?

நாங்கள் தனித்தனியாக பிரிந்ததால்தான் இளையராஜா இந்தி படத்திற்கு இசையமைக்க முடிகிறது. பாரதிராஜா ஒரு நானா படேகரை வைத்து படம் எடுக்க முடிகிறது. வைரமுத்துவால் ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் படைக்க முடிகிறது. மூவரும் சேர்ந்திருந்தால் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருந்திருப்போம். மூவரும் சேரும் காலம் வருமா என்கிறீர்கள். வயது பக்குவத்தை கொடுத்திருக்கிறது. பார்ப்போம்... நீங்கள் கேட்டது நிறைவேறலாம்.

தரவு - தமிழ்சினிமா.காம்